Pages

Monday, October 27, 2008

அந்த ஒரு நாளுக்காக...

இங்கே...
இந்த திரிகள் கருவதற்காக

அங்கே...
எத்தனை கைகள் கருகியதோ!

வெடிக்கும் முன் முதலாவதாய் முந்தி நிற்கும்
இந்த திரிகளை உருவாக்கியது
எத்தனை பிஞ்சுகளின்.. கருகிய நெஞ்சங்களோ.. !

வைத்த நெருப்பால்...வெடித்த வெடியால்...
வீசும் வாசத்தை சுவாசிக்கும் முன் கொஞ்சம் யோசித்தால்
நெஞ்சம் வெடிக்கிறது

இங்கே... சிறுவன்
பட்டாசை "வெடித்துவிட்டு"
சத்தம் கேட்டு "கை தட்டுகிறான்"...

அங்கே... சிறுவன்
பட்டாசை "படைத்துவிட்டு"
பணம் கேட்டு "கை நீட்டுகிறான்"

இங்கே...
சில குழந்தைகள் பயத்தால் வீரிடுகிறது
சில குழந்தைகள் பற்றவைத்து வீசி பந்தாடுகிறது॥

அங்கே... குழந்தை தொழிலாளர்கள்
பட்டாசுத் தொழிற்சாலையில் சீரழிகிறது...

இங்கே...ஒரேநாளில் வெடிச்சாச்சு...
கொண்டாடி முடிச்சாச்சு...
வேலைக்கு, பள்ளிக்கு கிளம்பியாச்சு
மும்பரமாய்॥!

அங்கே...
எதிர்பாராத நெருப்பால் எப்போது வெடிக்குமோ
பயந்துகிட்டே வாழ்ந்தாச்சு
அந்த பயமும் பழகிப்போச்சு...

மீண்டும் அந்த கைகள்
மருந்துக் கலவையில்
திரிகளை சொருகத் தொடங்கியாச்சு
பம்பரமாய்...

நாம் பற்ற வைக்கும்
அந்த ஒருநாளுக்காக...!