Pages

Monday, October 27, 2008

அந்த ஒரு நாளுக்காக...

இங்கே...
இந்த திரிகள் கருவதற்காக

அங்கே...
எத்தனை கைகள் கருகியதோ!

வெடிக்கும் முன் முதலாவதாய் முந்தி நிற்கும்
இந்த திரிகளை உருவாக்கியது
எத்தனை பிஞ்சுகளின்.. கருகிய நெஞ்சங்களோ.. !

வைத்த நெருப்பால்...வெடித்த வெடியால்...
வீசும் வாசத்தை சுவாசிக்கும் முன் கொஞ்சம் யோசித்தால்
நெஞ்சம் வெடிக்கிறது

இங்கே... சிறுவன்
பட்டாசை "வெடித்துவிட்டு"
சத்தம் கேட்டு "கை தட்டுகிறான்"...

அங்கே... சிறுவன்
பட்டாசை "படைத்துவிட்டு"
பணம் கேட்டு "கை நீட்டுகிறான்"

இங்கே...
சில குழந்தைகள் பயத்தால் வீரிடுகிறது
சில குழந்தைகள் பற்றவைத்து வீசி பந்தாடுகிறது॥

அங்கே... குழந்தை தொழிலாளர்கள்
பட்டாசுத் தொழிற்சாலையில் சீரழிகிறது...

இங்கே...ஒரேநாளில் வெடிச்சாச்சு...
கொண்டாடி முடிச்சாச்சு...
வேலைக்கு, பள்ளிக்கு கிளம்பியாச்சு
மும்பரமாய்॥!

அங்கே...
எதிர்பாராத நெருப்பால் எப்போது வெடிக்குமோ
பயந்துகிட்டே வாழ்ந்தாச்சு
அந்த பயமும் பழகிப்போச்சு...

மீண்டும் அந்த கைகள்
மருந்துக் கலவையில்
திரிகளை சொருகத் தொடங்கியாச்சு
பம்பரமாய்...

நாம் பற்ற வைக்கும்
அந்த ஒருநாளுக்காக...!

Thursday, March 27, 2008

சாராயம்

அனைத்தையும் மறக்க
அதுவே..
மருந்தென நினைத்துச் சென்றவன்..
அதை மறக்க தேடுகிறான்
மருந்தை!

Wednesday, March 26, 2008

லாட்டரி கடை

"லாபம் பரிசகம்"
பெயர் அருமை!
யாருக்கு லாபம்?

எறும்பு கடித்தது

உதறாமல் உடுத்தியதால்..
உதறினேன்
கை கால்களை!

Friday, March 14, 2008

மரண ஓலம்

நடந்த பாதையை
மறுபடி கடந்து போகையில்
கேட்கிறது
மிதிபட்டு நசுங்கிய
எறும்புகளின்
மரண ஓலம்!

Friday, March 7, 2008

வியர்வை

மேகம் கருக்கவில்லை
ஆனாலும், உழைக்கும்
அவனைச்சுற்றி மட்டும்
வீழ்ந்துகொண்டிருந்தது
துளி!

அவனிடமிருந்தே!..

Sunday, March 2, 2008

இரண்டாந்தாரமாய்..

மிக்ஸி
கிரைண்டர்
வாஷிங்மெஷின்
என எல்லாம் புதுசுதான்..

எனைக்கட்டிவைத்தனர்
பணக்காரக்கிழவனுக்கு!

ஆடைக்குறைப்பு

சீக்கிரம்
மாறிவிடுவோம் போலிருக்கிறதே
ஆதிமனிதனாக..!

ஆடைப்பற்றாக்குறையால் அல்ல..
நாகரீக வளர்ச்சியால் !

காலதாமதம்

பள்ளிப்பருவத்திலிருந்தே
பழகிவிட்ட ஒன்று
தொடர்கிறது..
வேலைக்குச் செல்லும்போதும்!

வெட்கப்படும் மாப்பிள்ளை

ஊரெல்லாம்
பார்த்துக்கொண்டிருக்க..
உரிமையாளன் பார்க்கவில்லை
மணமேடையில் மணப்பெண்ணை!